www.babisan2013.com

Home » photos » babi » பள்ளியெனும் பெருஞ்சிறை

பள்ளியெனும் பெருஞ்சிறை

Advertisements
imagesநமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை. ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்று சொன்னார் அபுல் கலாம் ஆசாத். மாணவர்களே நாட்டின் வருங்காலத் தூண்கள் என்பதையே இவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஆனால் நாளைய தலைமுறை இன்று பள்ளிகளில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் மற்றும் இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியையாகப் பணியாற்றிய உமா மகேசுவரி, அவரிடம் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனாலேயே கொலை செய்யப்பட்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியர் பணி மீதிருந்த காதலால் தனக்குக் கிடைத்த வங்கிப் பணியையும் மறுத்து விட்டு, ஏழு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியைக்கு கிடைத்த இந்த முடிவு அதிர்ச்சியானதுதான். ஆனால் கொலை செய்ய நீண்ட அந்தக் கைகள் மாணவனுடையது மட்டும் தானா என்று நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது. அவருடைய உடலில் சரமாரியாக விழுந்த அந்தக் குத்துகள், நம் கல்வி முறையின் மீது, ஏனைய ஆசிரியர்கள் மீது, சமூகத்தின் மீது, மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத அரசின் மீது என்று நம் அத்தனை பேருக்கும் அந்தக் குத்து விழுந்திருக்கிறது. இந்தக் கொலையில் அனைவருக்கும் பங்குண்டு என்பதை நாம் கவனப்படுத்த வேண்டும்.
தவறு செய்த (கொலை செய்த என்று எழுதவும் கரம் நடுங்குகிறது) அந்த மாணவனின் வீட்டுச் சூழலைக் கவனித்தால் மகிழுந்திலேயே பள்ளி வந்து செல்லுமளவுக்கு வசதியானவன். மூன்று பெண் குழந்தைகளுக்கு இடையில் ஒரே ஆண் பிள்ளை எனும் செல்லம். ஒவ்வொரு நாளும் 100 ரூபாயைச் செலவுக்குக் கொடுக்கும் பெற்றோர். வீட்டில் தனி அறை, கணிணி வசதி. மிக அமைதியானவன். யாருடனும் கலந்து பழகாத தன்மை. ஆசிரியருக்குப் பயந்து அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுப்பவன். அந்த மாணவன் குறித்து ஊடகங்கள் நமக்கு வழங்கிய சித்திரம் இது.
இன்றைய மாணவன் கடும் உளவியல் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கிறான். பெரும்பாலான பள்ளிகளில் இது கவனிக்கப்படுவதேயில்லை. மேற்கத்திய மனோபாவத்துடன் வாழத் துடிக்கும் பெற்றோர், மகனு/ளுக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறார்களே தவிர, தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிப் பேசுவது, அவர்களுடன் விளையாடுவது பற்றிச் சிந்திப்பதில்லை. பள்ளிகளைப் பொறுத்தவரையில் 100% தேர்ச்சியை நோக்கிச் சவுக்கை சுழற்றும் ரிங் மாஸ்டர்களாக இருந்து கொண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்திக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களை வியாபாரப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஊடகங்கள், தம் பொறுப்பை மறந்து, துறந்து இழிதொழில் செய்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் இருக்கும் பெற்றோரே ஆசிரியர் என்பதை மறந்தே போன ஆசிரியர், மாணவனது உள நலம் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் மதிப்பெண் அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு, உரையாடலேதுமின்றியே அவனைக் குற்றம் சாட்டி விட்டு நகர்கிறார். அவனைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகம் அவனை மேலும் பல தூண்டில்களோடு வீழ்த்தக் காத்திருக்கிறது. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக அதிகத் தொகை ஒதுக்கு அக்கறையோடு கவனிக்க வேண்டிய அரசாங்கம், மாணவர் நலன் பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் அவ்வப்போது எழும் பிரச்சனைகளைத் திசை திருப்பிச் செல்கிறது. மாணவனின் உடல், உள நலம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் சற்றும் பிரக்ஞையற்ற மண் போன்ற கல்வித்திட்டம் அவன் காலைப் பிடித்திழுக்கிறது. அதன் பின்னொட்டாய்த் தேர்வுகள்.
இதனால்தான் ஆசிரியை உமா மகேசுவரி கொல்லப்பட்டபோது பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையிலிருந்து வெளி வருவதற்குள் விருது நகரில் ஆசிரியரை மிரட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. காலை வழிபாட்டிற்குச் செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த இரண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஆசிரியர் கண்டித்தபோது, எங்களைக் கண்டித்தால் சென்னையில் நடந்தது இங்கும் நடக்கும் என்று அவர்கள் ஆசிரியரை மிரட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே நடந்திருந்த கொலையால் மிரண்டிருந்த ஆசிரியர் சமூகம், வெகுண்டெழுந்து, அந்த மாணவர்கள் மீது புகார் கொடுத்ததால் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களாய்த் தேர்வு எழுத வேண்டியவர்கள் இப்போது தனித் தேர்வர்களாய்த் தேர்வு எழுதிக் கொண்டிருப்பர். அரசை எதிர்த்து ஊதிய உயர்வுக்காகவும் வேறு பயன்களுக்காகவும் போராட்டம் நடத்திய ஆசிரியர் சமூகம் அங்கு, மாணவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. தான் செய்வது இன்னதென்பதை உணராது மாணவன் செய்யும் தவறுக்கு இத்தனை கடுமையான தண்டனை தேவையா என்று அந்த ஆசிரியர் ஏதேனும் ஒரு கணத்தில் இதைச் சிந்தித்திருந்தாலும் தவிர்த்திருக்கலாம்.
ஆசிரியரும் மாணவரும் பள்ளியில் எட்டு, ஒன்பது மணி நேரத்தை ஒன்றாகவே கழிக்கின்றனர். ஒரு நாளின் மிக முக்கியமான, மனிதன் மிகச் செயலூக்கத்துடன் இருக்கும் பொழுதுகளை அவர்கள் ஒன்றாகக் கழிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நேர்க் கோட்டில் சற்றே பெற்றோர் மனோபாவத்துடனும், ஆசிரியராயும் கொஞ்சம் நட்பாயும் இருக்க வேண்டிய ஆசிரியர், மாணவர் உறவு இன்று ஆசிரியர் X மாணவர் என்று விரோத பாவத்துடன் எதிர் எதிர் வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருப்பது யாருடைய பிழை என்பதை மாணவனை விடவும் ஆசிரியரே மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் கையில் அலை பேசியும், அறையில் கணிணியும் அமர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களின் கரம் பற்றிப் பேசவும் உணர்வுகளால் அவர்களின் உள்ளம் தொடவுமான உறவுகள் ஏதுமின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்கள் விளையாடும் கணிணி விளையாட்டுகளில் கூட கொலையும் வன்முறையும் புகுந்திருப்பதை, வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியும் வன்முறையைப் போதிப்பதை எவரேனும் கவலையுடன் யோசிக்கிறார்களா?
ஒற்றைக் குழந்தையாய், அணுக்குடும்பங்கள் பெருகி வரும் இவ்வேளையில் குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தல், சொல்வதையெல்லாம் அப்படியே நம்புதல், பெற்றோரின் நேரமின்மை ஆகியவை ஏமாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்குவதில்லை. உலகச் சுகாதார அமைப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சியில் குறிக்கோளுடன் வாழ்வது எப்படி, பொறுமை, சகிப்புத் தன்மை, ஒழுக்கம் போன்ற பத்து விஷங்களில் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.
கசடு அறக் கற்ற கல்வி இன்று பணத்தைத் துரத்திச் செல்லும் கல்வியாய் மாறி விட்டது. பெற்றோர், தன் மகன் முதல் மாணவனாய் வர வேண்டும்; பணம் கொழிக்கும் படிப்புகளைப் படிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். மாணவர்களும் தொழில்சார் படிப்புகளே உயர்ந்தது என்ற மனோபாவத்துடன் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை நோக்கி நகர்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளி நிர்வாகமும் பெற்றோரிடம் அதற்கான கல்விக் கட்டணமாகப் பெரும் தொகையைக் கறந்து விடுகிறது. உண்மையான கல்வி இவர்கள் கையில் சிக்காமல் வேறெங்கோ இருப்பதைப் பார்க்கையில் ஒரு இதழ்க்கடை முறுவலுடன் நகர்வதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் நாம் இருக்கின்றோம்.
இரண்டு நாட்களாகத் திட்டமிட்டு, கத்தி வாங்கி, அவர் தனியாக இருப்பார் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவரைக் கத்தியால் குத்திய அந்த மாணவனின் மனத்தில் வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன எல்லோரையும்தான் சுட்டிக் காட்ட வேண்டும். பதினான்கு முறை அந்தச் சிறுவனுக்குப் படிப்பு வரவில்லை என்பதை, சரியாகப் பள்ளிக்கு வரவில்லை என்பதை, தேர்ச்சி பெற முடியாது என்பதை அந்த ஆசிரியர் சுட்டிக் காண்பித்திருக்கிறார். தேர்ச்சி அட்டையிலும் பள்ளி நாட்குறிப்பிலும் திரும்பத் திரும்பப் பதியப்பட்ட இந்தக் கருத்து அந்த மாணவனின் உள்ளத்தைப் பாதித்திருப்பதும் அதை எடுத்துச் சென்று பெற்றோரிடம் கையெழுத்துப் பெற்று வர வேண்டுமென்ற உத்தரவில் அவன் அவர்களிடம் வாங்கி இருக்கக் கூடிய திட்டு, அடி ஆகியவையும் அவன் அதற்கு முதல் நாள் பார்த்த திரைப்படமும் தன்னால் படிக்க முடியாது என்று கேலி செய்த அவனுடைய இந்தி புத்தகமும், இவை எல்லாமும்தான் ஆசிரியர் மீதான கத்திக்குத்துக்குக் காரணம்.
கற்பதும் கற்பிப்பதும் மட்டுமே நடக்கும் பயிலரங்கமல்ல பள்ளிக் கூடம். அனைவருடனும் கூடி மகிழ்ந்து, விட்டுக் கொடுத்து, விளையாடி உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலைப் பயிலும் இடமும்தான். கல்வியை மட்டிலும் கற்பிக்க இன்று பல தனிப் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன. விளையாட்டு, ஓவியம், பாட்டு, நடனம், நன்னெறிக் கல்வி, பண்பாட்டு நிகழ்ச்சிகள் என இன்னோரன்ன கல்விகளும் மாணவனுக்குத் தேவையாய் இருப்பதை யார் யாருக்கு உணர்த்துவது? இவை தானே மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மனத்தை விசாலமாக்கும் வாயில்கள். இந்த வாசல்களை அடைத்த ஒரு பெருஞ்சிறையாகக் கல்வி வளாகத்தை மாற்றியது யாருடைய குற்றம்? படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை; அது வாழ்வின் ஒரு பகுதிதான் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம். கோடை விடுமுறையை கூட விடாமல் வீட்டுப் பாடங்களைப் பெரும் சுமையாய்க் கொடுப்பதும் 10, 12 வகுப்பு மாணவர்களின் மொத்த நாட்களையும் களவாடி அவர்கள் கையில் புத்தகத்தைத் திணிப்பதும் உண்மையான கல்வியைக் கொடுக்குமா? இப்படிப் பயிலும் மாணவர்களின் மனத்தில் கல்வி சார்ந்து என்ன மாதிரியான பிம்பம் உருவாகும்?
மாணவனைச் சிறு வயதிலிருந்தே கவனிக்கும் ஆசிரியர், அவனிடம் இருக்கும் சிறு வன்முறையையும் கவனித்து அக்கறையாய்ப் பேசி, பெற்றோரிடம் அறிவித்து, அவன் வாழ்வை மடைமாற்றம் செய்வதாலேயே மாதா பிதா குரு தெய்வம் என்று பெற்றோருக்கு அடுத்த நிலையில், தெய்வத்துக்கும் முன்னர் வைக்கப்பட்டனர் ஆசிரியர் பெருமக்கள். ஆசிரியப் பணி அறப்பணியாகக் கருதப்பட்ட கால்மொன்று இருந்தது. இன்றைக்கு இப்பணியில் புகுந்துள்ள சில காளான்களால் ஆசிரியர் சமூகமே குற்றவாளிக் கூண்டில் தலை குனிந்து நிற்க வேண்டிய அவல நிலை.
ஒரு பள்ளிக் கூடம் கட்டப்படுகிறதென்றால் பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று கூறுவார்கள். அதனால்தான் நம் பாரதியும்,
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் 
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”
என்று எழுத்தறிவித்தலை ஏற்றிப் போற்றிப் பாடுகின்றார்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது. அந்த மிருகத்தை அடியோடு ஒழித்து, நல்ல பண்புகளைப் புகட்டுமிடமாகப் பள்ளிகள் இருக்க வேண்டுமேயன்றி அந்த மிருகத்தைத் தூண்டி விட்டுக் கொலைக் களத்துக்கு அனுப்பும் பணியைச் செய்தல் தகாது. பள்ளிக் கூடத்தின் நீண்ட, நெடிய, பிரம்மாண்டமான சுவர்களுக்கு நடுவில் எந்த நுண்கலைகளுக்கும் விளையாட்டுக்கும் இடமில்லாமல் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் அட்டை கொடுப்பவராக மட்டும் ஆசிரியர் இருத்தலும் அந்த மதிப்பெண் அட்டையில் கையெழுத்திடுபவராக மட்டுமே பெற்றோர் இருப்பதுமே இத்தகைய கேடுகளுக்கு முதன்மைக் காரணம்.
பல ஆண்டுகளாக மாணவர் தற்கொலைகள் நடந்து, நடந்து அது நம் மனத்துக்குப் பழக்கப்பட்ட செய்தியாகி விட்டது. அவை இன்றைக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதில்லை. இப்போது கத்தி நம் பக்கம் திருப்பப் பட்டிருக்கிறது. அதன் முதல் குறி ஆசிரியர். இன்றைக்கு உமா மகேசுவரி. இன்னும் இருக்கும் வரிசையில் ஒவ்வொருவராய்க் குறி பார்க்கப்படுவர். இனியும் தாமதித்தால் நாம் நம் பிள்ளைகளை இழப்போம்; பிள்ளைகள் தம் குழந்தைமையை இழப்பார்கள்; நாடு ஒரு தலைமுறையையே இழக்கும். இனியாகிலும் சிந்திப்போமா நாம்?       
     –    தி. பரமேசுவரி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s